புது டெல்லி, 01 ஜூலை (பெர்னாமா) -- இந்தியத் தலைநகர் புது டெல்லியில், இளைஞர்கள் தலைமையிலான Cockroach Janta Party- சி.ஜே.பி கட்சியின் தலைவர்கள் சுமார் இரண்டு வாரங்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட, கல்வி சார்ந்த பல பிரச்சனைகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு, அந்நாட்டின் பிரபல சமூக ஆர்வலர் கோல்டன் காங்சுக்கும் உடன் இணைந்து ஆதரவளித்துள்ளார்.
இந்த போராட்டங்களுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் குறிப்பிடத்தக்க அமைச்சரவை மாற்றங்களை பரிசீலித்து வருவதாகவும், தர்மேந்திரா பிரதான், தமது பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இப்போராட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று கூறி, பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு ஆதரவளித்து வருவதாக சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
மேலும், தர்மேந்திரா பதவி விலகும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார.
டெல்லியில் நடக்கும் போராட்ட இடத்தில், சி.ஜே.பி-இன் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் தினமும் கூடி வருகின்றனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]