கோலாலம்பூர், 01 ஜூலை (பெர்னாமா) -- மலேசியா, ஏ.ஐ காலக்கட்டத்திற்கு மாறுவதற்கான ஓர் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், ஏ.ஐ நிர்வகிப்பு சட்ட மசோதாவை இறுதி செய்யும் அதேவேளையில், அரசாங்கம் அத்தொழில் துறையினரிடமிருந்தும் கருத்துகளைக் கோரி வருகிறது.
இச்சட்ட மசோதாவில் தொழில்துறை நிபுணத்துவம் இடம்பெறுவதையும், அது உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போவதையும் உறுதிசெய்ய, அரசாங்கம் அந்தத் துறையினருடன் கலந்துரையாடும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
''மேலும், எங்களுக்கு உங்கள் கருத்து தேவைப்படும். உங்களிடம் இந்த நிபுணத்துவமும், பல நாடுகளில் உள்ள சில விதிமுறைகளையும் சட்டங்களையும் புரிந்துகொள்வதில் அனுபவமும் இருப்பதால், நான் சம்பந்தப்பட்ட அலுவலகங்களையும் அமைச்சையும் கலந்துரையாட அழைக்கிறேன். நாங்கள் அதிநவீன தொழில்நுட்பத்தில் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்,'' என்றார் அவர்.
ஏ.ஐ நல்ல வாய்ப்புகளை வழங்கினாலும், பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு தொடர்பான முக்கிய கேள்விகளையும் அது எழுப்புவதால் ஒரு வலுவான நிர்வாகக் கட்டமைப்பு அவசியம் எனவும் பிரதமர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]