Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தொடர்ச்சியான உலக சாதனைகள்; தந்தைக்கு சமர்ப்பணம் செய்யும் மகன்

01/07/2026 04:16 PM

கோலா லிப்பிஸ், 01 ஜூலை (பெர்னாமா) -- 18 மணி நேரம் இடைவிடாது உடற்பயிற்சி மற்றும் பளுதூக்கும் சவாலின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மூன்றாவது முறையாக பெயர் பதித்துள்ளார், கே. ஜெய் (K Jey) என்றறியப்படும் உடற்பயிற்சி வீரர் ஜெய் பிரபாகரன் குணசேகரன்.

மூன்று வயதில் தந்தையை இழந்ததே, தமது தொடர் உத்வேகத்திற்கான காரணம் என்று கூறிய அவர், 42-வது வயதில் உயிரிழந்த அந்த தந்தைக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிப்பதாகவும் கே. ஜெய் கூறுகிறார். 

அதுமட்டுமின்றி, Influencer உலக சாதனை புத்தகம் உட்பட மலேசிய சாதனைப் புத்தகத்திலும் மூன்றாவது முறையாக கே. ஜெய் தமது பெயரை பதித்திருப்பது உத்வேகத்தின் ஊற்றாக இருந்த தமது தந்தைக்கு அரப்பணிக்கும் அர்த்தமுள்ள பரிசு எனவும் கே. ஜெய் தெரிவித்தார்.  

முன்னதாக, இதே பிரிவில் 12 மணி நேரம் மற்றும் 15 மணி நேரம் இடைவிடாது உடற்பயிற்சி மற்றும் பளுதூக்கும் சவாலின் மூலம் உலக சாதனைகளைப் படைத்த 29 வயதுடைய கௌரவ டாக்டர் பட்டம் கொண்ட கே. ஜெய், தற்போது 18 மணி நேர சாதனையின் வழி தமது சொந்த சாதனைகளையும் முறியடித்ததாகக் குறிப்பிட்டார். 

இதனிடையே, பல வாய்ப்புகளை கொண்டுள்ள இத்துறையில் இணைந்து பயனடையும்படி இந்திய இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

''இச்சாதனையின் மூலம் இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அது உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதோடு மலேசிய இந்திய உடற்பயிற்சி சங்கத்தின் கீழ் அதிகமான இந்திய இளைஞர்களை இதில் ஈடுபடச் செய்கிறோம். இச்சங்கத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு வழங்கும் நிதியின் மூலம் அதிகமான திட்டங்களை வகுத்துள்ளோம். நீங்கள் கண்டிப்பாகப் பயனடையலாம்,'' என்றார் அவர்.  

கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு படைத்த தேசிய சாதனைக்குப் பின்னர், இந்த சவாலுக்கான தயார்நிலை பணிகளைத் தொடங்கியதாக மலேசிய இந்திய உடற்பயிற்சி சங்கத்தின் தலைவருமான கே. ஜெய் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]