வெனிசுலா, 28 ஜூன் (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,430-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,360 பேர் காயமடைந்துள்ளதாக வெனிசுவேலா தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
இப்பேரிடரில், 172 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், 3,007 பேர் இடம்
பெயர்ந்துள்ளதாக கூறிய ரோட்ரிக்ஸ், இதுவரை 70,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அதிகாரிகள் உதவி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலநடுக்கம் ஏற்பட்டு சில நாட்கள் ஆகியும், வெனிசுலாவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அகப்பக்கத்தின் வழி, 50,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் 13 மருத்துவமனைகள், 25 வணிக மையங்கள் உட்பட 383 கட்டிடங்களும் இதர 1,002 வசதிகளும் சேதமடைந்ததன.
இந்நிலையில், நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் அவசரமாகத் திரட்டப்பட்டுள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]