Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பிரான்சில் வெப்ப அலை; 5 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

29/06/2026 08:14 PM

பாரிஸ், 29 ஜூன் (பெர்னாமா) -- கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் பிரான்சின் பல பகுதிகளைத் தாக்கிய மோசமான வெப்ப அலையால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் அங்குப் பதிவாகியுள்ளன.

வெப்ப அலையின் போது, இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றும், தரவுகள் காட்டுவதாக பிரான்ஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களைக் காட்டிலும் பல வட்டாரங்களில் வெப்ப அலை குறையத் தொடங்கியிருந்தாலும், அதனால் ஏற்பட்டிருக்கும் உடல்நல பாதிப்புகள் இன்னும் குறையவில்லை என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பதிவான 109 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், 30 மாரடைப்பு சம்பவங்கள் உட்பட 80 இறப்புகளை, பாரிஸ் அவசர மருத்துவ சேவை மையம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலத்த இடியுடன் கூடிய மழையால் சில பகுதிகளில் வெப்பநிலை குறைந்திருந்தாலும், வெப்பம் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் இன்னும் பரபரப்பான நிலையில் உள்ளன.

இதனால், பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன், தென்கிழக்கு மற்றும் கிழக்கு பிரான்சின் சில பகுதிகள் உட்பட மொத்தம் 22 வட்டாரங்களுக்கு ஆரஞ்சு நிற வெப்ப அலை எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)