Ad Banner
Ad Banner
 பொது

சபாவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

08/06/2026 02:56 PM

தாவாவ், 08 ஜூன் (பெர்னாமா) --  இன்று காலை மணி 7.37-க்கு பிலிப்பைன்ஸ், மின்டானோவில் ரிக்டர் அளவு கருவியில் 7.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவில் உள்ள விஸ்மா பெர்சக்குத்துவான் மற்றும் தாமான் தாவாவ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் நில அதிர்வை உணர்ந்ததாக, தீயணைப்பு துறை இரண்டு புகார்களைப் பெற்றுள்ளது.

எனினும், இந்த அதிர்வினால் இதுவரை சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி மட்ஸ்லான் சர்மான் கூறினார்.

''தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு அழைப்புக் கிடைத்ததும் நாங்கள் இயந்திரங்களையும் அதிகாரிகளையும் கடலோரப் பகுதிக்கு அனுப்பு வைத்தோம்'', என்றார் அவர்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி கடல்நீர் மட்டம் இயல்பாக இருப்பதாக மட்ஸ்லான் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

தாவாவ் நகரில் உள்ள கடலோரப் பகுதியில் நிலைமை அமைதியாக இருப்பதோடு, கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.

கடலில் சில படகுகள் செயல்பட்டாலும், பொதுமக்கள் கடற்கரைக்கு அருகில் செல்ல கண்காணிப்பில் ஈட்டுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

மின்டானோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இன்று காலை மணி 10.30 முதல் நண்பகல் 12 வரை தாவாவ், செம்போர்னா, குனாக் மற்றும் லஹாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளில் 0.4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

எனினும், நண்பகல் மணி 12க்கு அந்த எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது.

இதனிடையே, இன்று காலை பிலிப்பைன்ஸ், மின்டானோவைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவின் கிழக்கு கடற்கரையில் இதுவரை எவ்வித சேதங்களோ அல்லது கடல் நீர் மட்டத்தில் வழக்கத்திற்கு மாறான உயர்வோ ஏற்படவில்லை என்று அம்மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், ஜே.பி.பி.எம் உறுதிப்படுத்தியது.

கடலோரப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஆபத்தான இடங்களை, லஹாட் டத்து, தாவாவ், குனாக் மற்றும் செம்போர்னா ஆகியவற்றின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவ்வப்போது தீவிரமாக கண்காணித்து வருவதாக, ஜே.பி.பி.எம்-இன் நடவடிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)