கோலாலம்பூர், 07 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டிக்கான களம் மட்டுமல்ல.
மாறாக, அம்மாநிலத்தின் எதிர்காலப் போக்கையும் மக்களின் நல்வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு முக்கியத் தளமாகும்.
பத்து பஹாட்டில், நேற்றிரவு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்ட ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கைக் கூட்டணி கேந்திர அறிமுக நிகழ்ச்சி மூலம் அது தெளிவாக உணர்த்தப்பட்டதாக அக்கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இத்தேர்தல் தமது விருப்பத்தால் நடத்தப்படவில்லை என்றும், மாறாக, மக்களுக்கான முயற்சிகளிலும் பணிகளிலும்தான் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் நம்பிக்கை கூட்டணி தலைவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நிகழ்ச்சியில் கூறியிருந்ததை அவர் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அதே எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாகப் பேசிய, ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்ய, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை ஏககாலத்தில் நடத்துவது முக்கியமானது என்று வலியுறுத்தியதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
அதோடு, மாநில அரசு மற்றும் மத்திய அரசாங்க நிர்வாகத்திற்கு இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை Amanah கட்சியின் தலைவரான Mohamad Sabu, அனைத்துக் கட்சிகளுக்கும் நினைவூட்டியதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்தார்.
ஜோகூருக்கு மகத்தான ஆற்றல் இருப்பதாகவும், திட்டமிடப்பட்ட வளர்ச்சி மக்களுக்கு உண்மையாகப் பயனளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், அம்மாநில சட்டமன்றம் ஜூன் 1 -ஆம் தேதி கலைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)