நியூயார்க், 06 ஜூன் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் தீவிரமடைந்து வரும் வன்முறை அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது.
வன்முறையினால், பொதுமக்களில் பலர் கொல்லப்படுவதாகவும், வடக்கு மற்றும் தெற்கு கீவு பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா எச்சரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பெனி எனும் பகுதியில் நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.
மசிசி, ஃபிசி மற்றும் வெங்கா ஆகிய இடங்களில் ஏற்பட்ட மோதல்கள் பலர் இடம்பெயர்வதற்கு வழிவகுத்ததாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் தெரிவித்தார்.
தீவிரமடைந்து வரும் வன்முறையினால், மனிதாபிமான நடவடிக்கைகள் மேலும் கடினமாகி எபோலா நோய்ப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தடுக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
''அங்கு எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் நாங்கள் குறிப்பிட்டது போல, நாங்கள் அங்குச் செய்யும் மனிதாபிமானப் பணிகளே ஏற்கனவே மிகவும் சவாலானவை. அதனுடன் எபோலாவும் சேரும்போது, அது எங்கள் பணியை இன்னும் சிக்கலாக்குகிறது. மேலும் அங்கு நிலவும் பாதுகாப்பின்மை, அந்த நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் கடினமாகிறது,'' என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பின்மை நிலவினாலும், ஏப்ரல் மாதம் முதல் பெனியில் உள்ள 8,000-க்கும் மேற்பட்டோருக்கும் பண உதவி வழங்கப்பட்டிருப்பதாக ஸ்டெஃபான் கூறினார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தினசரி நிலவரப்படி, எபோலா நோயினால் அந்நாட்டில் மொத்தம் 452 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 82 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)