Ad Banner
Ad Banner
 பொது

மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்கான முதன்மை அம்சங்கள் 

05/06/2026 07:40 PM

கோலாலம்பூர், 05 ஜூன் (பெர்னாமா) -- அதிகரித்து வரும் மின்சாரத் தேவையையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பையும் நிர்வகிப்பதோடு, எரிசக்தி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல நாடுகள் செயல்படுவதால் வட்டார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-ஐ கடப்பாட்டுடன் ஏற்றுக்கொள்வது ஆகியவை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உருவெடுத்துள்ளன.

இந்நிலையில், நீண்டகால முதலீடு மற்றும் எதிர்கால எரிசக்தித் தேவைகளுக்கு ஆதரவளிக்க வலுவான வட்டார ஒத்துழைப்பு இன்றியமையாதது என Tenaga Nasional நிறுவனம், டி.என். பி தலைவரும், தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஷம்சுல் அஹ்மாட் தெரிவித்தார்.

''எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது என்பதும் வலுவாக வெளிப்பட்டது. வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கும், நீண்டகால முதலீட்டை ஆதரிக்கும் அளவுக்கு ஆழமான சந்தைகளை உருவாக்குவதற்கும் வட்டார ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஒரு நாடாகவும் வட்டாரமாகவும் நாம் வளரும் வேகத்திற்கு ஈடாக, அதனை ஆதரிக்கத் தேவையான உள்கட்டமைப்பும் ஆற்றலும் அமைய வேண்டும்,'' என்றார் அவர். 

எரிசக்தி மற்றும் இலக்கவியல் துறைகளில், திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சி மற்றும் அடுத்த தலைமுறைத் திறமையாளர்களைக் கவர்வது ஆகியவற்றை வியூக முன்னுரிமைகளாகக் கருத வேண்டும் என்றும், உருவாக்கப்படும் அமைப்புகள் அவற்றை இயக்கும் மக்களின் வலிமையைப் பொறுத்தே அமையும் என்றும் டத்தோ ஷம்சுல் கூறினார்.

நடப்பில் உள்ள மின் வலையமைப்புகளை நவீனமயமாக்குவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கு ஆதரவளிக்கும் வகையில் போதுமான வசதியை உறுதி செய்வது ஆகியவையும், இனிவரும் காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் முக்கிய அம்சங்களாகத் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 எரிசக்தி மாற்ற மாநாடு, ETCon26-இல் தனது நிறைவு உரையில் ஷம்சுல் அவ்வாறு விவரித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]