Ad Banner
Ad Banner
 பொது

'லிண்டுங் 24 ஜாம்' திட்டம் - இன்று முதல் அமல்

01/06/2026 07:22 PM

புத்ராஜெயா, ஜூன் 1 (பெர்னாமா) -- இன்று திங்கட்கிழமை தொடங்கி அமலுக்கு வரும் 1969 ஆம் ஆண்டு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம், சட்டம் 4-இன் கீழ், 90 லட்சத்திற்கும் அதிகமான சமூகப் பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ சந்தாதாரர்கள் வேலை நேரத்தைக் கடந்தும், 24 மணி நேரமும் முழுமையான விபத்து பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

சட்டத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 'லிண்டுங் 24 ஜாம்' LINDUNG 24 JAM எனப்படும் இந்த 24 மணி நேரப் பாதுகாப்பு திட்டம் பொது விடுமுறை நாள்கள் உட்பட பெர்கேசோ சந்தாதாரர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது பணியில் இருக்கும் அனைத்து முறைசார் தொழிலாளர்களுக்கும் இந்த பாதுகாப்பு தானாகவே நடைமுறைக்கு வரும் என்பதால், முதலாளிகளோ அல்லது தொழிலாளர்களோ இதற்கு புதியப் பதிவு எதையும் செய்ய வேண்டியதில்லை. 

எனினும், முதலாம் தேதிக்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேருபவர்களை முதலாளிகள் வழக்கம் போல் பெர்கேசோவில்  அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த 'லிண்டுங் 24 ஜாம்' திட்டத்திற்கான சந்தாத் தொகையைத் தொழிலாளர்களே முழுமையாக ஏற்கும் வேளையில், இது 6,000 ரிங்கிட் சம்பள உச்சவரம்புக்கு உட்பட்டு, தற்போதைய மாதச் சம்பளத்தில் 0.75 விழுக்காடு என்ற ஆரம்ப விகிதத்தில் கணக்கிடப்படும்.

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இந்தத் தொகையைக் கழித்து, மாதாந்திரச் சந்தாவாகச் செலுத்தும் பொறுப்பை முதலாளிகள் ஏற்பார்கள்.

இத்திட்டத்தின் கீழ் மருத்துவ நலன்கள், தற்காலிக மற்றும் நிரந்தர மாற்றுத்திறனாளிகளுக்கான பலன்கள், சார்ந்திருப்பவர்களுக்கான பலன்கள், மரணச் சடங்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை உட்பட மொத்தம் 8 முக்கியப் பலன்களை பெர்கேசோ வழங்குகிறது. 

இது தொடர்பான விவரங்களைப் பெற விரும்புவோர் https://lindungfaedah.perkeso.gov.my/  எனும் அகப்பக்கம் அல்லது அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகத்தை நாடலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)