ஜார்ஜ்டவுன், 31 மே (பெர்னாமா) -- இன்று அனுசரிக்கப்படும் 2026-ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, புகையிலை மற்றும் நிகோடின் தொழில்துறைகளால் பயன்படுத்தப்படும் சூழ்ச்சி நிறைந்த, 'சந்தைப்படுத்தும் உத்திகளை' அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், அது போன்ற புகையிலை எதிர்ப்பு பிரச்சாரம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் என்கிறார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரியும் புகையிலை எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளருமான என்.வி.சுப்பாராவ்.
தனது பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு, புகையிலை மற்றும் நிகோடின் தொழில்துறைகள் பல சூழ்ச்சிகள் நிறைந்த உக்திகளை கையாண்டு வருவதாக என்.வி.சுப்பாராவ் கூறினார்.
அதன் விளைவாகச் சிறார்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் பலர் சிகரெட்டுகளை தவிர்த்து வேப் எனப்படும் மின் சிகெரட்டுகளுக்கு அடிமையாகிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்ப பள்ளி மாணவர்களிடையே வேப் புகைக்கும் பழக்கம் அதி வேகமாக அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
புதிய தலைமுறை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரைக் கவர்வதற்காக மின் சிகரெட்டுகள், நிகோடின் பைகள் மற்றும் செயற்கை நிகோடின் சாதனங்கள் போன்ற புதிய தயாரிப்புகளை, இந்த நிறுவனங்கள் தீவிரமாகச் சந்தைப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
''வேப்பில் போதைப்பொருள் கலந்து சந்தையில் விற்கப்படுகிறது. இதனால் இளைய சமூகத்தின் எதிர்காலம் வீணாகிறது'', என்று அவர் கவலை தெரிவித்தார்.
தற்போது புதிய கலாச்சாரமாக உருவெடுத்துள்ள வேப் பழக்கத்திற்கு 200,000 பேர் அடிமையாகி உள்ளனர்.
இதனிடையே, இத்தீய பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்கக் குழந்தைகளைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் சுப்பாராவ் அறிவுறுத்தினார்.
''பெரியவர்கள் குறிப்பாகப் பெற்றோர் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். இதன் வழி (வேப்) ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்,'' என்று அவர் மேலும் விவரித்தார்.
மேலும், அனைத்து வேப் பொருள்களுக்கு விரிவான தடையை அமல்படுத்த மலேசிய அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் மலேசியாவில் 26,000 பேரும் , உலக அளவில் 80 லட்சம் பேரும் புகைப்பழக்கத்தினால் உயிரிழிக்கின்றனர்.
மலேசியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 லட்சத்து 37,000 ஆண் புகைப்பாளர்களும், 61,000 பெண் புகைபாளர்களும் இருப்பதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.
அதே நேரத்தில் 10 லிருந்து 14 வயதுக்கு உட்பட்டவர்களில் ஆண்கள் 21.7 விழுக்காடாகவும் பெண்கள் 3.9 விழுக்காடாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)