நியூயார்க், 29 மே (பெர்னாமா) -- அமெரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகரமான நியூயார்க், உலக கிண்ண காற்பந்தாட்டத்தின் மையமாக மாறுவதற்கு தனது இறுதிக் கட்ட ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
2026 FIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தை வழங்குவதற்கு, தயாராகி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கவும் நியூயார்க் உறுதியளித்துள்ளது.
சுமார் 85 லட்சம் மக்களைக் கொண்ட நகரமான நியூயார்க், மன்ஹாட்டன், புரூக்ளின், குயின்ஸ், பிராங்க்ஸ் மற்றும் ஸ்டேட்டன் தீவு ஆகிய ஐந்து முக்கிய பெருநகரப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
லிபர்ட்டி சிலை மற்றும் எம்பையர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவற்றால் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படும் இந்நகரம், ஒவ்வொரு ஆண்டும் அறுபது லட்சத்திற்கும் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஆனால், ரூதர்ஃபோர்டில் உள்ள மெட்லைஃப் அரங்கம் என்று பரவலாக அறியப்படும் நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கம் மீது மக்களின் கவனம் திரும்புயுள்ளது.
வரும் ஜூலை 19-ஆம் தேதி, 2026 FIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டியின் உச்சக்கட்ட அம்சமான இறுதி ஆட்டத்தை நடத்தும் மாபெரும் பொறுப்பை இந்த மைதானம் ஏற்க உள்ளது.
இறுதி ஆட்டத்தின் போது போக்குவரத்து இலகுவாக்க, நியூ ஜெர்சி இரயில் சேவையும் மேம்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க, அதன் டிக்கேட் விலையும் குறைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 11-ஆம் தேதி தொடங்கவிருக்கும் 2026 FIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் முதல் முறையாக இணைந்து நடத்தவுள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]