Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தம்பி கொலை; அண்ணனும் நான்கு நண்பர்களும் குற்றச்சாட்டப்பட்டனர்

20/05/2026 06:23 PM

ஈப்போ, 20 மே (பெர்னாமா) -- தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில், கடந்த வாரம், தனது சொந்த தம்பியையே கொலை செய்ததாக, அண்ணனும் அவரின் நான்கு நண்பர்களும் இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

எஸ். கே. ஶ்ரீ சக்திவேல், அவரின் நான்கு நண்பர்களான கே.திருச்செல்வன், சஷிபால் சிங் மன்முஹான் சிங், என்.தனேஸ்வரன், பி.உகேந்திரன் ஆகியோருடன், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு நபருடன் இணைந்து, எஸ்.கே.கிருஷ்ணன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மே 12 -ஆம் தேதி பின்னிரவு மணி ஒன்று முதல் அதிகாலை மணி நான்கிற்குள், அலான் பெர்பாடுவான் சௌத்வார்ட் தஞ்சோங் ரம்புத்தான் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அவர்கள் இக்கொடூரச் செயலைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது அதிகபட்சம் நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302 மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், மாஜிஸ்திரேட் நோரிசான் ரிடுவான் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, அவர்களிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பை ஜூலை 26-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கடந்த வாரம் ஈப்போவில் உள்ள ஜாலான் லாங் இன்டா A/5 சாலையில், கார் ஒன்றில், ஓர் இளைஞர் சடலமாகக் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னதாக, மின்கம்பி திருட்டு தொடர்பான தகறாரில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)