Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

செபக் தக்ரோ உலகக் கிண்ணத்தை வரலாற்றுச் சாதனைப் படைத்தது மலேசியா

20/05/2026 06:49 PM

கோலாலம்பூர், மே 20 (பெர்னாமா) -- செபக் தக்ரோ அரங்கில் முதன் முறையாக உலகக் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது மலேசியா.

கோலாலம்பூர், திதிவாங்சா அரங்கில் நேற்றிரவு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தேசிய அணி உலகின் கவனத்தை ஈர்த்தது.

அக்பிபுடின் ரசாலி, ஷஹாலில் ஐமான் ஹலிம், அமிருல் ஷஸ்வான் அமிர் மற்றும் ஐடில் ஐமான் சவாவி ஆகியோரால் பலப்படுத்தப்பட்ட மலேசிய அணி, ஆட்டம் தொடங்கியது முதல் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியது.

அதற்கு எதிராக மோதிய இந்திய அணியில், அகாஷ் யும்னாம், போபி குமார், சோரோகைபாம் மலேம்ங்கன்பா சிங் மற்றும் ராம் குமார் ஷர்மா ஆகியோர் போட்டியிட்டனர்.

பதற்றமான தருணங்களில் தேசிய அணி வெளிப்படுத்திய நிதானமான ஆட்டத்தினால் மலேசியா முதல் செட்டை 17-15 என்ற நிலையில் கைப்பற்றியது.

இரண்டாவது செட்டிலும் அந்த வேகம் தொடர்ந்ததால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மலேசியா, எதிரணிக்கு அதிக இடம் கொடுக்காமல் 15-10 என்ற புள்ளிகளில் வெற்றியை உறுதிசெய்து உலக வெற்றியாளர் ஆனது.

வரலாற்று சிறப்புமிக்க அந்த தருணத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹமெட் தவ்ஃபிக் ஜொஹாரியும் துணையமைச்சர் மொர்டி பிமோலும் நேரில் கண்டு களித்தனர்.

இதனிடையே, உலக அரங்கில் நாட்டிற்கு பெருமையைத் தேடி தந்த மலேசிய அணிக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)