Ad Banner
Ad Banner
 பொது

சுயக்கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஆசிரியருக்கு லட்சாதிபதி அந்தஸ்தை பெற்று தந்தது

15/05/2026 06:35 PM

ஈப்போ, 15 மே (பெர்னாமா) -- சிறுகக் கட்டி பெருக வாழ் எனும் முதுமொழிக்கு ஏற்ப, தமது கல்லூரி காலத்திலிருந்தே சேமிக்கத் தொடங்கிய ஆசிரியர் ஒருவரின் சுயக்கட்டுப்பாடும் ஒழுக்கமும், இன்று அவருக்கு லட்சாதிபதி எனும் அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. 

கடந்த 37 ஆண்டுகளாகக் கடைபிடித்த சேமிப்புப் பழக்கத்தினால், வரலாற்று ஆசிரியரான முனீஸ்வரன் மணியம் என்பவர், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு Bank Simpanan Nasional, BSN வங்கியின் அதிர்ஷ்ட குலுக்கில் 10 லட்சம் ரிங்கிட் பரிசை வென்றார். 

1989-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது BSN வங்கியில் கணக்கு ஒன்றை திறந்து சேமிப்பை ஆரம்பித்ததாக தற்போது பினாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் 56 வயதுடைய முனீஸ்வரன் மணியம், தெரிவித்தார்.

தாம் வேலைக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து சேமித்து வந்ததாக கூறிய முனீஸ்வரன், இச்சேமிப்பு முதிய வயதிற்கான பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்துடன் நீண்டகால திட்டமாக மேற்கொள்வதற்கு BSN வங்கியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். 

புதிய வாகனம் ஒன்றை வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும், தற்போது கிடைத்துள்ள வெற்றித் தொகையையும் மீண்டும் சேமிப்பிலேயே வைக்க திட்டமிட்டுள்ளதாக நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, சிறு வயதிலிருந்தே தமது பிள்ளைகளுக்கும் சேமிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாக முனீஸ்வரன் கூறினார்.

ஆசிரியர் தினத்துடன் இணைந்த இவ்வெற்றி மிகவும் சிறப்பான அனுபவம் என்று கூறிய அவர், மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பிப்பதற்கு தமக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இப்பரிசைக் கருதுவதாக மனம் நெகிழ்ந்தார். 

வரவுக்குள் செலவு செய்து, அவசரத் தேவைகளுக்காக சேமித்து, நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென முனீஸ்வரன் வலியுறுத்தினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]