Ad Banner
Ad Banner
Ad Banner
 

மின்சார டிரக்குகளுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் பரிசீலனை

14/05/2026 05:18 PM

ஶ்ரீ கெம்பாஙான், 14 மே (பெர்னாமா) -- வர்த்தக வாகனத் தொழில்துறையை, மின்சார டிரக்குகளுக்கு மாற்றுவதை விரைவுபடுத்துவதற்காக, அதைச் செயல்படுத்துபவர்களின் முதலீட்டுச் செலவுகளைக் குறைக்கும் வகையில் வரி விலக்குகள் போன்ற சலுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மின்சார டிரக்குகளை நோக்கிய மாற்றம் என்பது, நாட்டின் நிலைத்தன்மை செயல்திட்டத்தை ஆதரிப்பதோடு, டீசல் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நீண்டகால நடவடிக்கையாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

''மின்சார வாகனங்களுக்கான முதலீட்டுச் செலவைக் குறைக்கும் நோக்கில், மின்சார டிரக்குகளுக்கு வரி விலக்கு போன்ற கூடுதல் சலுகைகளை வலியுறுத்துவதற்காக, மின்சார வாகனப் பணிக்குழுவில் கலந்துரையாடலை மேற்கொள்ள நாங்கள் பரிசீலித்து வருகிறோம். நீண்ட கால அடிப்படையில், அரசாங்கம் இன்னும் வர்த்தக வாகனங்களுக்கு அதிக உதவித்தொகை வழங்கி வரும் வேளையில், தற்போதைய விலை நிலையில் நாடு மின்சார வாகனங்களுக்கு மாறுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டு மலேசிய வர்த்தக வாகனக் கண்காட்சியைத் தொடக்கி வைத்த பிறகு பேசிய லோக், வழக்கமான டிரக்குகளுடன் ஒப்பிடும்போது மின்சார டிரக்குகள் கணிசமாக அதிக விலை கொண்டவையாக இருப்பதோடு, அவற்றுக்கு மின்னூட்டும் உள்கட்டமைப்பு மற்றும் துணை வசதிகளில் பெரும் முதலீடு தேவைப்படுவதாகவும் கூறினார்.
  
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)