கோலாலம்பூர், மே 11 (பெர்னாமா) -- தாய்மை என்பது அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த உயர்ந்த உணர்வு மட்டுமல்லாது, ஒரு தலைமுறையை உருவாக்கும் ஓர் உன்னத சக்தியாகும்.
தாய்மையின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், வம்சம் எனப்படும் மலேசிய கருவுருதல் மற்றும் குடும்ப மேம்பாட்டு சங்கம், தனது ஏற்பாட்டில் அன்னையர் தின விழாவை சிறப்பாக நடத்தியுள்ளது.
நேற்று அனுசரிக்கப்பட்ட அன்னையர் தினத்தை முன்னிட்டு, கோலாலம்பூர், Royal Selangor Club-இல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மதியம் 3 மணி தொடங்கி இரவு மணி 7 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜோகூர், மலாக்கா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 80 பேர் கலந்து கொண்டதாக மலேசிய கருவுருதல் மற்றும் குடும்ப மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் முனைவர் சத்தியவதி அழகிரிசாமி தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவோம் என்றக் கருப்பொருளுடன் செயல்பட்டு வருகிறது.
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு நம்பகமான சேவையை மேற்கொண்டு வருவதோடு கருத்தரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது.
இதில் பயனடைந்த தாய்மார்கள் இந்த அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதோடு அவர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)