Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

முதலமைச்சர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மாற்றும் திட்டம் தற்போதில்லை - பினாங்கு

11/05/2026 05:18 PM

ஜார்ஜ்டவுன், 11 மே (பெர்னாமா) -- மாநில முதலமைச்சர் பதவிக் காலத்தை இரு தவணைகளிலிருந்து பத்தாண்டுகளுக்கு மாற்றும் எண்ணத்தை பினாங்கு அரசாங்கம் தற்போது கொண்டிருக்கவில்லை. 

அப்பதவிக்கான கால வரம்பு தற்போதுள்ள மாநில அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் சௌ கொன் யாவ் தெரிவித்தார். 

பினாங்கு மாநில அரசியலமைப்பின் 7-வது பிரிவு உட்பிரிவு 2(a)-வின்படி, பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்றதும், எந்தக் காலத்திலும் இரு முறை அப்பதவியை வகித்திராத மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மாநில ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார் என்று சௌ விவரித்தார். 

''ஒரு மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே அது கலைக்கப்படும் பட்சத்தில், ‘இரு தவணைகள்’ என்பது, முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் உள்ள ஆண்டுகளின் ஒட்டுமொத்தக் கணக்கீடாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதில் உள்ள மொத்தக் காலம் 10 ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்கலாம். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்,'' என்றார் அவர். 

பினாங்கு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சௌ அதனைக் கூறினார்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]