சென்னை, 10 மே (பெர்னாமா) -- பல நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகம், தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் பதவியேற்றார்.
இந்திய நேரப்படி காலை மணி 1030-க்கு மேல் தொடங்கிய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
விஜயுடன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உட்பட ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அனைவரும் பதவியேற்ற பின்னர், விழா மேடையிலேயே முக்கியமான ஆவணங்களில் விஜய் கையெழுத்திட்டார்.
இதன் வழி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை மற்றும் போதைப்பொருளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை ஆகிய திட்டங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
மேலும், தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
அதோடு, கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்திருப்பதால் அம்மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று விஜய் கூறியிருக்கிறார்.
பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
மே 13-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ சட்ட மன்றப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் விஜயை அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர், சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற விஜய் அலுவல் பணிகளைத் தொடங்கினார்.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிறகு தற்காலிகச் சட்டமன்ற தலைவருக்கான உத்தரவில் விஜய் கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நாளை காலை மணி 9.30க்கு கூடும் நிலையில் மே12-ஆம் தேதி புதிய சட்டமன்றத் தலைவர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் விஜய் தலைமையிலான புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)