கோலாலம்பூர், 09 மே (பெர்னாமா) -- தனிப்பெரும் கட்சியாக வென்றும் ஆட்சியமைக்க தொடர் இழுபறியைச் சந்தித்து வரும் தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க தலைவர் விஜய் முதல்வராகி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை ஆளுநர் வழங்குவாரா?
அல்லது, ஏறத்தாழ 70 ஆண்டுகால அரசியல் வைரிகளான, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி சேருமா?
இல்லை, ஆறு மாதக் காலத்திற்கு அதிபர் ஆட்சி அமைக்கப்படுமா?
மீண்டும் தேர்தலா?
இவ்வாறாக, பல கேள்விகளுடன் உலகப் பார்வையைப் பெரிதும் ஈர்த்து வரும் தமிழ்நாட்டு அரசியல் குறித்து சட்ட ரீதியிலான சில தகவல்களை பகிர்கிறார் வழக்கறிஞர் டத்தோ S. முருகேசன்.
தமிழ்நாட்டில் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அ.தி.மு.க மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எம். தம்பிதுரை வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், இது தமிழ்நாட்டு அரசியல் சூழலில் சாத்தியமான ஒன்றா என்பது குறித்து டத்தோ எஸ். முருகேசன் இவ்வாறு விவரிக்கின்றார்.
''ஆட்சியில் அமர்வதற்காகவே இரு அரசியல் எதிரிகளும் கூட்டணிகளாக இணைந்ததாகக் கருதப்படும். இக்கூட்டணி, குறுகிய காலத்திற்கு நன்மையளித்தாலும், நெடுங்காலத்திற்கு பாதகத்தையே விளைவிக்கும். அதோடு, ஜனநாயகத்தின் தார்மீக அடிப்படையிலும் இது அமையாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரு கட்சிகளுக்குமே பின்னடைவு தான,'' என்றார் அவர்.
த.வெ.க ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசாங்கத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக ஆளுநர் பெருவாரியாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிகாரத்திற்குட்பட்டுள்ள சில தேர்வுகளை முருகேசன் தெளிவுபடுத்தினார்.
''விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு ஆளுநர் அதிகாரம் வழங்கலாம். அதாவது சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்குமாறு அறிவுறுத்தலாம். ஆனால், சட்டமன்றத்தில் தமக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்பதை விஜய் ஓரிரு நாள்களில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாத பட்சத்தில் விஜய் பதவி விலக வேண்டும். மறுத்தேர்தல் நடத்துவது இரண்டாவது தேர்வாக உள்ளது. மூன்றாவதாக, அதிபர் ஆட்சியை ஆறு மாதத்திற்கு அமைக்க முடியும். அந்த ஆறு மாதக் காலத்தில் எந்தக் கட்சியாவது கூட்டணி சேர்ந்து 118 தொகுதிகளைப் பெற்றால், அவர்கல் ஆட்சியமைக்க முடியும்,'' என்று அவர் விளக்கினார்.
இதனிடையே, இந்தத் தேர்தலில் இளைஞர்கள், அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களின் பங்கு அளப்பரியதாகத் திகழ்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
''சமூக ஊடகத்தில் உள்ள தாக்கம் வாக்குகளாக மாறியுள்ளது. எனவே, சமூக ஊடகம் வாழ்க்கையில் பங்களிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது,'' என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், தமிழ்நாடு ஆளுநரிடம் "போலியான" ஆதரவுக் கடிதம் வழங்கியதாக விஜய் மீது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் புகார் அளித்திருப்பது, த.வெ.க-வின் நிலையை சற்று வலுவிழக்கச் செய்துள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தற்போது 116 இடங்களைக் கொண்டிருக்கும் த.வெ.க-விற்கு விடுதலை சிறுத்தை கட்சி, வி.சி.க-வின் ஆதரவு உள்ளதா என்பது இந்திய நேரம் மாலை மணி நான்குக்கு தெரியவரும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]