கோலாலம்பூர், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- தம் மீதான ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
விண்ணப்பதாரர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்ஷன் 417-இன் கீழ் உள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் நீதிபதி நூர் ருவேனா முஹமட் நூர்டின் அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார்.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் இந்த வழக்கில் கூட்டரசு அரசியலமைப்பு தொடர்பான விஷயங்கள் உட்பட சிக்கலான அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சனைகள் அடங்கியுள்ளதாக ஷம்சுல் இஸ்கண்டார் வாதிட்டார்.
கடந்தாண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, தமது அதிகாரப்பூர்வ கடமைகளுடன் தொடர்பில்லாத ஒன்றாக இருப்பினும், தொழிலதிபர் அல்பெர்ட் தெய் ஜியான் செங்கின் நிறுவனத்திற்கு சபாவில் கனிம ஆய்வு உரிமம் பெற உதவுவதற்காக அவரிடமிருந்து ஒரு லட்சம் ரிங்கிட் கையூட்டு பெற ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஷம்சுல் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும்,முறையே 14,580 ரிங்கிட் மூன்று சென் மற்றும் 22,249 ரிங்கிட் மதிப்புடைய தளவாடங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் வடிவில் இலஞ்சம் பெற்ற இரு குற்றச்சாட்டுகளுக்குக் கூடுதலாக, அதே நபரிடமிருந்து 40,000 ரிங்கிட் ரொக்கமாகப் பெற்ற மற்றொரு குற்றச்சாட்டையும் ஷம்சுல் எதிர்நோக்கியுள்ளார்.
2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 17 உட்பிரிவு ஏ மற்றும் அதே சட்டம் செக்ஷன் 24 உட்பிரிவு ஒன்றின் கீழ் இவ்வனைத்து குற்றங்களும் விசாரிக்கப்படுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)