மஞ்சோங், ஏப்ரல் 27 (பெர்னாமா) -- நேற்று பேராக், மஞ்சோங் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையான WCE-இல் உள்ள சித்தியவான் நெடுஞ்சாலையின் டோல் சாவடிக்கு நுழைவதற்கு அருகில், நடத்தப்பட்ட Ops Motosikal சோதனை நடவடிக்கையில் 46 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று பின்னிரவு மணி ஒன்று தொடங்கி அதிகாலை மணி ஆறு வரையில் நடைபெற்ற இந்நடவடிக்கையில் 138 மோட்டார் சைக்கிள்களையும் எட்டு கார்களையும் போலீசார் சோதனை செய்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் இந்நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 234 சம்மன்கள் வெளியிடப்பட்டன.
அதோடு, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 42 உட்பிரிவு ஒன்றின் கீழ், கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றத்திற்காக 16 முதல் 19 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக ஏசிபி ஹஸ்புல்லா விவரித்தார்.
அதே சட்டம் செக்ஷன் 64 உட்பிரிவு ஒன்றின் கீழ் 46 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மஞ்சோங் மாவட்டத்தில் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)