கோலாலம்பூர், ஏப்ரல் 27 (பெர்னாமா) -- இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் மையங்களாகவும் திகழ வேண்டும்.
இந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ‘தர்மா மடானி’ எனும் நிதியுதவித் திட்டத்தை மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர், இத்திட்டமானது வெறும் நிதிப் பங்கீடு மட்டுமல்ல; மாறாக இந்திய சமூகத்தின் அடித்தளத்தை அடிமட்ட அளவில் பலப்படுத்துவதற்கான ஒரு வியூக முதலீடு என்று விளக்கினார்.
"இந்தியச் சமூகத்தின் உயிர்நாடியே ஆலயங்கள்தான். அங்கிருந்துதான் நற்பண்புகள், ஒற்றுமை மற்றும் கூரிய சிந்தனை பிறக்கின்றன. எனவே, ஆலய நிர்வாகங்கள் நமது இளம் தலைமுறையினருக்கு ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் கல்வியைப் புகட்டும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, தேவார வகுப்புகள், பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் கபடி போன்ற கலைப் பயிற்சிகளுடன், மாணவர்களுக்கான கூடுதல் கல்வி போதனை வகுப்புகள் மற்றும் தலைமைத்துவ முகாம்களை நடத்தும் மையங்களாக ஆலயங்கள் உருமாற வேண்டும்," என அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.
மேலும், இந்த நிதியானது ஆலயங்களின் கட்டிட வளர்ச்சி அல்லது உள்கட்டமைப்பு பணிகளுக்கானது அல்ல என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாறாக, ஆன்மீக மற்றும் சமூக மேம்பாடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் கல்வி ஆதரவு ஆகியவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்த அணுகுமுறையானது, ஆலயங்களைச் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் புகலிடங்களாக மாற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திட்டத்தின் தற்போதைய நிலை:
நாடு முழுவதும் உள்ள 1,000 இந்து ஆலயங்கள் பயனடையும் வகையில் மொத்தம் இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வோர் ஆலயத்திற்கும் 20,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே முதற்கட்டமாக 155 ஆலயங்களுக்கு 31 லட்சம் ரிங்கிட் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வு நாளை ஏப்ரல் 28-ஆம் தேதி காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெறும்.
இதில் மேலும் 300 ஆலயங்களுக்கு மொத்தம் 60 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
நிர்வாக வெளிப்படைத்தன்மை:
நிர்வாகத் தூய்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், ‘தர்மா மடானி’ நிதியுதவி பெறும் ஆலயங்களின் பட்டியல் மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.mitra.gov.my) அவ்வப்போது பதிவேற்றப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)