Ad Banner
 பொது

ஜோகூர்: இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா 42 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

21/04/2026 05:58 PM

கூலாய், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் கீழ் ஜோகூரில் உள்ள இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா 42 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் கூடுதல் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளிகளை உட்படுத்தி, இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் இக்கட்டுமானப் பணிகள், அடுத்தாண்டு இரண்டாம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.  

கூலாய் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாகவும், 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன், மலேசியாவில் அதிக மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாகத் திகழும் கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், சுமூகமான கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுவதாக வோங் கா வோ கூறினார். 

அதுமட்டுமின்றி, சுமார் 103 மாணவர்களுடன் இயங்கும் பாலர் பள்ளியும் அங்குள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், எட்டு வகுப்பறைகளுடன் கூடிய இப்புதியக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் பொது மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்படுவதாக வோங் விவரித்தார்.    

''அனைத்து செயல்முறை பணிகளை மேற்கொள்வதற்கும் இன்றைய வருகை முதல் முறை மேற்கொள்ளப்படுவது அல்ல. கடந்தாண்டு முதலே கல்வி அமைச்சு, பள்ளி மேலாளர் வாரியம், பள்ளி நிர்வாகம், மாநில கல்வி துறை, மாவட்ட கல்வி அலுவலகம் இணைந்து பணியாற்றுகிறது; பள்ளியின் தேவையை உறுதி செய்யும் பொருட்டு. ஏனெனில், ஒதுக்கப்படும் ஒவ்வொரு சென்னும் முறையாகப் பயன்படுத்தப்பட்டு அதன் இலக்கை அடைவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார் அவர். 

தேசிய கல்வி அறவாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து அடுத்தக்கட்ட பணிகளும் கல்வி அமைச்சால் அவ்வப்போது கண்காணிக்கப்படும் என்று துணை அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். 

இதனிடையே, மாணவர்களின் கூடுதல் வகுப்புகளுக்காக இப்புதிய இணைக் கட்டிடம் பயன்படுத்தப்படும் என்று பள்ளியின் தலைமையாசிரியை விசாலெட்சுமி பெருமாள் தெரிவித்தார். 

மற்றொரு நிலவரத்தில், இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்றத்தில் உள்ள ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், 42 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 8 வகுப்பறைகள், ஆசிரியர் அறை உட்பட தகவல், தொடர்பு தொழில்நுட்பம், ஐ.சி.டி அறை கொண்ட புதியக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.  

தொடக்கத்தில் 28 லட்சம் ரிங்கிட்டாக அறிவிக்கப்பட்ட இதற்கான ஒதுக்கீடு பின்னர் 42 லட்சம் ரிங்கிட்டாக அறிவிக்கப்பட்டதாக, அப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் செல்வநாதன் பொன்னன் குறிப்பிட்டார்.    

''நாங்கள் முதலில் புத்ராஜெயா சென்றபோது 28 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. குத்தகை வெளியான போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் 35 லட்சம் ரிங்கிட்டாக அதிகமானது. பிறகு துணை அமைச்சர் இங்கு வருகையளித்து 42 லட்சம் ஒதுக்கீடு என்று அறிவித்தார். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி,'' என்றார் அவர். 

இப்பள்ளிகளில் அனைத்து செயல்முறைகளும் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், துணை அமைச்சரின் இவ்வருகை அமைந்தது. 

தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]