புத்ராஜெயா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- கெடா, கூலிமில் நடத்தப்பட்ட கைது நடவடிக்கையின்போது, சந்தேக நபர் ஒருவரின் தலையில் மிதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் உறுப்பினர் சம்பந்தப்பட்ட வழக்கில் செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி பின்பற்றப்பட்டதா என்பதை ஆராய்வது உட்பட உடனடி விசாரணை நடத்தும்படி உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அவ்விவகாரம் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்துவதற்காக, கெடா மாநில போலீஸ் தலைவரை தாம் தொடர்புக் கொண்டதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
"விசாரணையின் முடிவில், செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி-யில் மீறல் உள்ளதா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு நேறிமுறைத் துறையை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவந்தால், நான் எல்லாவற்றையும் ஆராய வேண்டும். சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ளும்போது போலீஸ் அதிகாரிகளின் மன உறுதியைக் குலைக்கும் பொறுப்பற்ற செயல்களை நான் செய்ய முடியாது. ஏனெனில், இந்த சந்தேக நபர்கள் சில சமயங்களிள் ஆவேசமாக நடந்து கொள்கிறார்கள்", என்றார் அவர்.
போலீஸ் நெறிமுறைப் பிரிவு உட்பட எடுக்கப்படும் எந்தவொரு தொடர் நடவடிக்கையும் விசாரணையின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் தெளிவுப்படுத்தினார்.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட 29 வினாடி காணொளியில் போலீஸ் அதிகாரி ஒருவர் சந்தேக நபரை மோட்டார் சைக்கிளிலிருந்து இழுத்து கீழே தள்ளி, அவரது தலையை மிதிக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)