புத்ராஜெயா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசியாவில் உள்ள மூத்த குடிமக்களில் வெறும் 14.7 விழுக்காட்டினர் மட்டுமே ஆரோக்கியமான முதுமையை அடைவதற்கான ஐந்து முக்கிய அளவுகோல்களைப் பூர்த்தி செய்திருப்பதாக 2025-ஆம் ஆண்டின் தேசிய சுகாதார மற்றும் நோய்நிலை ஆய்வு, என்.எச்.எம்.எஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
உயர் மட்ட சமூக ஆதரவைப் பெற்றிருப்பது, அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் மனச்சோர்வு இல்லாதிருப்பது, அன்றாட நடவடிக்கைகளில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய திறன் மற்றும் நாள்பட்ட நோய்கள் இல்லாதிருப்பது அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நாள்பட்ட நோய்கள் ஆகியவை அந்த ஐந்து அளவுகோல்களாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
7,528 பேர் பங்கேற்ற, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களின் சுகாதார நிலை குறித்து கவனம் செலுத்தும் இந்த இரண்டாவது ஆய்வு, 2018-ல் நடத்தப்பட்ட முதல் ஆய்வின் தொடர்ச்சியாகும் என்று அவர் கூறினார்.
மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் முதுமையடைவதை உறுதிசெய்ய, பொது சுகாதார முயற்சிகளையும் சமூக ஆதரவையும் வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
''இப்போதிருந்து 2036-ஆம் ஆண்டு வரையில், 2036-ல் நாம் 60 வயதைக் கடந்த 15% பேரை அடைவோம். உண்மையில் இது 15 முதல் 16 ஆண்டுகள் மட்டுமே. இதை, 30 ஆண்டுகளுடன் 100 ஆண்டுகளோடு ஒப்பிட்டால், இது 1.5 மடங்கு வேகமான முதுமையடையும் செயல்முறையாகும்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற, 'என்.எச்.எம்.எஸ் 2025 ஆய்வின் முடிவுகள்: முதியோரின் ஆரோக்கியம்' எனும் வெளியீட்டு விழாவில் அவர் அவ்வாறு கூறினார்.
நடமாடுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் ஆகிய இரண்டு அமைப்பு ரீதியான சவால்களும், முதியவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் மீது சுமத்தப்படும் நிதிச் சுமையையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)