Ad Banner
Ad Banner
 பொது

ஜோகூரில் 13 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

02/04/2026 06:04 PM

ஜோகூர் பாரு, 02 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மார்ச் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில், செரி ஆலம் மற்றும் ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட இரு வெவ்வேறு அதிரடி சோதனைகளின் வழியாக, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

12 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளோடு, மொத்தம் 13 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பறிமுதலும் செய்யப்பட்டது.

அவ்விரு சோதனைகளில், உள்நாட்டைச் சேர்ந்த நான்கு ஆண்கள், ஒரு பெண், சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் ஆண் மற்றும் ஒரு வியட்நாம் பெண் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அச்சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

செரி ஆலம் பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், ஐவரைப் போலீசார் கைது செய்ததோடு பல்வேறு வகையான போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

''மேலும், 1,400 ரிங்கிட் மதிப்புடைய 2.4 லிட்டர் எம்.டி.எம்.ஏ திரவம், 13,200 ரிங்கிட் மதிப்புடைய 1,098 கிராம் எக்ஸ்டஸி தூள், 1,600 ரிங்கிட் மதிப்புடைய 22 கிராம் எடையுள்ள 80 எரிமின் 5 மாத்திரைகள், 1,300 ரிங்கிட் மதிப்புடைய 26 கிராம் எடையுள்ள இரண்டு ஷாபு பொட்டலங்கள் மற்றும் பல்வேறு பெட்டி மறு பொட்டலமிடும் உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன,'' என்று அவர் கூறினார்.

தமான் ஶ்ரீ தெப்ராவில் கடைவீட்டில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில் வியட்நாமியப் பெண் மற்றும் உள்ளூர் ஆண் என மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

69 கிராம் எம்.டி.எம்.ஏ, 65.08 கிராம் 212 எக்ஸ்டஸி மாத்திரைகள், 100 கிராம் கெத்தமின் மற்றும் நான்கு பொட்டலம் ஷாபு, 174 கிராம் எடையில் இரு ஹெரோயின் பொட்டலம் மற்றும் 104 மில்லிலிட்டர் அளவிலான திரவ கெத்தமின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)