Ad Banner
Ad Banner
 பொது

பூஜை பொருட்கள் தயாரித்து, சந்தைப்படுத்தும் நிறுவன இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு

13/04/2026 04:54 PM

ஜார்ஜ்டவுன், 13 ஏப்ரல் (பெர்னாமா) -- 16,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை உட்படுத்தி, 2021 மார்ச் தொடங்கி 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை விற்பனை வரியைச் செலுத்தத் தவறியதாக 18 குற்றங்களுக்குப், பூஜை பொருட்களைத் தயாரித்து, சந்தைப்படுத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள் இன்று பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

எனினும், நீதிபதி இர்வான் சுஹாய்போன் முன்னிலையில் தங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டபோது , 45 வயதான மோகனதாஸ் வீராசாமியும் அவரின் தாயாரான 65 வயது சரோஜா தேவி சுப்ரமணியமும் அதனை மறுத்து விசாரணை கோரினர்.

கே.வி.எஸ் இன்டஸ்திரிஸ் (KVS Industries) நிறுவனத்தின் இயக்குநர்களான மோகனதாசும் சரோஜா தேவியும், கடந்த 2021 மார்ச் முதலாம் தேதி தொடங்கி 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, 18 மாத வரிவிதிப்பு காலங்களுக்கு, விற்பனை வரி மற்றும் அபராதமாக மொத்தம் 16 ஆயிரத்து 145 ரிங்கிட் 44 சென் நிலுவைத் தொகையை உள்ளடக்கிய விற்பனை வரியைச் செலுத்தத் தவறியதாக அவர்கள் மீது குற்றம் பதிவாகியுள்ளது.

2021 ஜூன் முதலாம் தேதி தொடங்கி 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி முதலாம் தேதி வரை, பினாங்கு, செபெராங் ஜெயாவில் உள்ள அரச மலேசிய சுங்கத் துறையின் பதிவு அமலாக்கம் மற்றும் வருமான நிர்வகிப்பு கிளை அலுவலகத்தில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், 2018-ஆம் ஆண்டு விற்பனை வரி சட்டம், சட்டம் 806, செக்‌ஷன் 26(5) உடன் வாசிக்கப்பட்ட அதே சட்டம் செக்‌ஷன் 26(9)-இன் கீழ் மோகனதாஸ் மற்றும் சரோஜா தேவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் வழக்கறிஞரை நியமிக்கவும், வழக்கின் மறுசெவிமடுப்பை மே 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)