Ad Banner
Ad Banner
 பொது

சுயமாக உணவு விலைகளை உயர்த்தாமல் இருப்பதை உயர்கல்வி கழகங்கள் உறுதிச் செய்ய வேண்டும்

13/04/2026 05:29 PM

கோலாலம்பூர், 13 ஏப்ரல் (பெர்னாமா) --  அனைத்து உணவக நடத்துநர்கள், சுயமாக உணவு விலைகளை உயர்த்தாமல் இருப்பதை அனைத்து உயர்கல்வி கழகங்களுக்கும் உறுதிச்செய்ய வேண்டும் என்று உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி கழக வளாகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து நியாயமானதாகவும், மாணவர்களுக்குச் சுமையாக அமையாத வகையிலும் இருப்பதை உறுதிச்செய்ய அவற்றின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையினால் தங்களின் வாழ்க்கைச் செலவினத்தில் அழுத்தம் ஏற்படுவதாக மாணவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டாக்டர் சம்ரி தெரிவித்தார்.

''தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் உணவக நடத்துநர்கள் தங்கள் விலைகளை உயர்த்தாமல் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மேலும் சில தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள சில உணவகங்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான விலைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஆகவே, இதுபோன்ற விஷயங்களை கணக்கில் கொள்ளுமாறு அவர்களுக்குத் தெரிவித்துள்ளேன்'', என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் Celik மடானி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சம்ரி அவ்வாறு கூறினார்.

சில கல்வி கழகங்களில் உள்ள உணவக நடத்துநர்கள், மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளாமல், வளாகத்திற்கு வெளியே உள்ளதைப் போலவே உணவு விலைகளை நிர்ணயிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)