மாரான், ஏப்ரல் 01 (பெர்னாமா) -- முருகப் பெருமானைப் போற்றும் திருநாள்கள் வரிசையில் தைப்பூசம், சித்ரா பெளர்ணமி போல பங்குனி உத்திரத் திருவிழாவும் மிகவும் பிரசித்தமாகும்.
எங்கெல்லாம் கந்த குமரன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் இந்த பங்குனி உத்திரம் கொண்டாடுவது வழக்கமாகும்.
மலேசியாவைப் பொறுத்த வரையில், பங்குனி உத்திரம் என்றாலே பகாங், மாரானில் வீற்றிருக்கும் ஶ்ரீ மரத்தாண்டவரையே மக்கள் அதிகம் தேடி கூடும் திருத்தலம் என்பதால் இவ்வாண்டும் அந்த எண்ணிக்கையில் குறைவில்லாமல் இருந்தது.
பங்குனி உத்திர திருநாள் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும்.
நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆலயமான, மாரான் ஶ்ரீ மரத்தாண்டவரின் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி சிறப்பு பூஜைகளோடும் திரளான பக்தர்களின் வருகையோடும் நிறைவடைவதாக
ஆலயத் தலைவர் ராமன் பழனியப்பன் கூறினார்.
இன்று தான் திருவிழா என்றாலும் கடந்த ஒரு வார காலமாகவே ஆயிக்கரணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை ஆலயத்தில் நிறைவேற்றத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
இன்று மாலை நிலவரப்படி சுமார் 35,000 பேர் பால்குடமும் 250 பேர் காவடியும் ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
முருகப்பெருமான் - தெய்வானை, சிவபெருமான் - பார்வதி, ஸ்ரீராமன் -சீ தா போன்ற தெய்வத் திருமணங்கள் இந்நன்நாளில் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
எனவே, குழந்தை வரம், திருமண வரத்திற்காக பலரும் இந்நாளில் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அப்படி வேண்டிக் கொள்ளவும் வேண்டுதலை நிறைவேற்றவும் அதிகாலையிலிருந்து ஆலயத்திற்கு வருகைப் புரியத் தொடங்கிய பக்தர்கள், பால்குடம், காவடி, முடி காணிக்கை, அங்கப்பிரதட்சனம் என்று தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
வேலை நாளாக இருந்த போதிலும், மரத்தாண்டவர் மீது கொண்ட பற்றுதலால் அதிகமானோர் விடுப்பு எடுத்துக்கொண்டு பல மைல் தூரங்களைக் கடந்து பாத யாத்திரையாக அவரை தரிசிக்க வந்திருந்தனர்.
ஒவ்வோர் ஆண்டையும் போல,ஆலய வளாகத்தைச் சுற்றிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் போடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்திற்கு அருகில் இருந்த பெரிய மண்டபத்தில் பக்தர்கள் தற்காலிகமாக தங்குவதற்கான இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)