Ad Banner
Ad Banner
 பொது

'MR. R' என்ற குறியீட்டுப் பெயருடன் தொடர்பா - ரமணன் அதிரடி மறுப்பு

25/03/2026 06:52 PM

சுங்கை பூலோ, மார்ச் 25 (பெர்னாமா) -- 95 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 'Mr. R' என்ற குறியீட்டுப் பெயருடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக விக்டர் சின் பூன் லோங் என்பவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போது தம்மிடம் எந்தவிதப் பொதுப் பங்குகளும் இல்லை என்பதால் அக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதோடு உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் கூறினார்.

விக்டர் சின் என்ற நபரைத் தமக்கு ஒருபோதும் தெரியாது என்பதுடன் அவருடன் எவ்வித தொடர்பிலும் தாம் இருந்ததில்லை என்றும் ரமணன் உறுதியாகத் தெரிவித்தார்.

"Mr. R யார் என்ற கேள்விக்கு விக்டர் சின்னால் மட்டுமே பதிலளிக்க முடியும். ஆனால், சில பொறுப்பற்ற நபர்கள் என்னை இதனுடன் தொடர்புபடுத்த முயற்சிப்பதை என்னால் உணர முடிகிறது. Mr. R  அது நான்தான் என்று அவர் சொல்கிறார். லட்சக்கணக்கான பங்குகள் என் பெயரில் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொய்! நான் எந்தப் பொதுப் பங்குகளையும் வைத்திருக்கவில்லை," என்றார் அவர்.
 
இன்று, சிலாங்கூர், சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, 'Mr. R' எனக் குறிப்பிடப்படும் நபர் தாமே என்பதை முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி வெளிப்படையாக கூற வேண்டும் என்றும் ரமணன் அவருக்கு சவால் விடுத்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)