சிப்பாங், 28 மார்ச் (பெர்னாமா) -- தீமோர் லெஸ்தேவின் விமான நிறுவனமான AeroDili 8-G-யிலிருந்து கோலாலம்பூருக்கான முதலாவது விமானப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவைக் காட்டுவதோடு முதலீடு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் இரு நாட்டு மக்களின் உறவுகளையும் மேம்படுத்தும்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆசியானின் ஐந்தாவது உறுப்பு நாடாக தீமோர் லெஸ்தே இணைந்ததைத் தொடர்ந்து, சரியான நேரத்தில் அப்பயணம் அமைந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் பெண்டிட்டோ டொஸ் சந்தோஸ் ஃப்ரெய்டஸ் தெரிவித்தார்.
டிலி-கோலாலம்பூருக்கான விமான சேவை இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தற்போது ஆசியானுடன் இணைந்து தனது வளர்ச்சியை தீமோர் லெஸ்தே விரிவுப்படுத்தி வருவதாகவும் டாக்டர் பெண்டிட்டோ டொஸ் சந்தோஸ் கூறினார்.
''இதுவரை இந்தோனேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் தினசரி விமான சேவைகள் இருந்தாலும், மலேசியாவுடன் இந்த இணைப்பைப் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்'', என்றார் அவர்.
இன்று, தீமோர் லெஸ்தேவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் இரண்டில் நடைபெற்ற முதலாவது விமானப் பயணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)