Ad Banner
Ad Banner
 பொது

உரிமம் இல்லாத புகைப்படக் கலைஞர்கள் விவகாரம்; கே.எல்.சி.சி சுற்றுப் பகுதிகளில் கூடுதல் மறைக்காணிகள்

28/03/2026 05:03 PM

ஜாலான் அம்பாங், 28 மார்ச் (பெர்னாமா) --  'ulat foto' என்றழைக்கப்படும் உரிமம் இல்லாத புகைப்படக் கலைஞர்கள் குறித்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாக கருதுகிறது.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், கே.எல்.சி.சி-யைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் அதிகமான மறைக்காணிகள் பொருத்தப்படவுள்ளன.

மறைக்காணி பொருத்துவதற்கான முயற்சிகள் குறித்து கே.எல்.சி.சி Property குழும நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் ஆகியவற்றுடன் தமது தரப்பு விவாதிக்கவிருப்பதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அப்பகுதியில் அமலாக்கத் தரப்பினர் அடிக்கடி ரோந்துப் பணிகளை மேற்கொள்வதாக கூறிய ஹன்னா, தாமும் அதனை சோதனை செய்யவிருப்பதாக குறிப்பிட்டார்.

''சுற்றுலாப் பயணிகள் பகடிவதைக்கு உட்படுத்தப்படுவதையோ அல்லது மலேசியர்கள் பகடிவதைக்கு உட்படுத்தப்படுவதையோ நான் விரும்பவில்லை. ஏனெனில், அது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். அவர்கள் வரும்போது கட்டணம் வசூலிக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் மொழி புரியவில்லை என்றால், அது இன்னும் மோசமானது'', என்றார் அவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி வளாகத்தில் ஒரு குழுவிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்ற நபரைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் உரிமம் இல்லாத 18 புகைப்படக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

17 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்த 18 புகைப்படக் கலைஞர்களும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 148-இன் கீழ் விசாரணைக்காக கே.எல்.சி.சி வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சசாலீ அடாம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)