பொகோத்தா, 24 மார்ச் (பெர்னாமா) -- கொலம்பியாவில், இராணுவ விமானம் ஒன்று புறப்படும்போது விபத்துக்குள்ளானதில், 66 பேர் உயிரிழந்த வேளையில் இன்னும் நால்வரைத் தேடும் பணிகள் தொடரப்பட்டுள்ளன.
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த LMT.N Hercules C-130 ரக விமானத்தில், 11 வான்படை உறுப்பினர்கள், 115 இராணுவ வீரர்கள் மற்றும் இரு போலீஸ் அதிகாரிகள் என மொத்தம் 128 பேர் பயணித்ததாக கொலம்பிய ஆயுதப்படைகளின் தலைவர் ஹ்யூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் தெரிவித்தார்.
இத்துயர விபத்தில் பலியானவர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நான்கு அதிகாரிகளை தேடும் பணிகள் தொடர்வதாகவும் ஹ்யூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் கூறினார்.
இவ்விபத்து, பெரு நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோவில் இருந்து விமானம் புறப்பட்டபோது நிகழ்ந்ததாக கொலம்பியாவின் தற்காப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் X சமூக ஊடக தளத்தில் தெரிவித்தார்.
தொலைதூர பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் முதலில் உயிர் பிழைத்தவர்களை மீட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை இராணுவ வாகனங்கள் அடைவது கடினமாக இருந்ததால் மீட்பு பணிகள் தாமதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]