புத்ராஜெயா, 23 மார்ச் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டில் மூன்று வெப்ப பக்கவாத சம்பவங்கள் மற்றும் வாகனத்தில் விடப்பட்ட ஒரு குழந்தையின் மரணம் உட்பட இதுவரை வெப்பம் தொடர்பாக மொத்தம் 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீடித்த மயக்கம், வழக்கத்திற்கு மாறான தாகம் மற்றும் அதிகரித்து வரும் உடல் வெப்பநிலை போன்ற வெப்ப பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்காணிப்பது உட்பட அனைவரும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்ஃகிப்ளி அஹ்மட், இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் உடனடியாக நிழலான இடத்தைத் தேடிச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்ஃகிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
மேலும், அதிகம் நீர் அருந்துமாறும், உடனடியாக உடல் சூட்டைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, குழந்தைகளை கண்காணிக்க யாரும் இல்லாமல் வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் வெப்பமான காலநிலையில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் ஆகியோர் வெப்ப பக்கவாத பாதிப்புக்கு ஆளாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் விவரித்தார்.
தினசரி வெப்ப வானிலை நிலவரம் குறித்த அண்மையத் தகவல்களுக்கு பொதுமக்கள் திரையில் காணும் அகப்பக்கத்தை நாடலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)