கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) -- தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வெப்ப வானிலையைத் தொடர்ந்து, உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
வெப்பமான காலநிலைக்கு மக்களை உட்படுத்தும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைப்பதன் மூலமும் இந்தக் காலகட்டம் முழுவதும் போதுமான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்வதன் மூலமும் ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மாமன்னர் வலியுறுத்தினார்.
தற்போதைய கடுமையான வெப்ப சூழ்நிலையை கல்வியமைச்சும் கடுமையாகக் கருத வேண்டும்.
ஜூன் மாதத் தொடக்கம் அல்லது மத்தியம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வெப்ப வானிலையால் பள்ளி மற்றும் உயர்க்கல்விக்கழக மாணவர்களின் உடல்நலம் பாதிக்காமல் இருப்பதை அதன் நிர்வாகத்தார் உறுதி செய்ய வேண்டும் என தமது முகநூல் பதிவொன்றில் மாமன்னர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தற்போதைய வெப்பமான வானிலை, நாடு முழுவதும் தீ விபத்துகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தனது தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அப்பதிவில் உத்தரவிட்டிருந்தார்.
வெப்பமான மற்றும் காற்று வீசும் சூழ்நிலைகள் தீ பரவுவதை வேகப்படுத்தும் என்பதால் பொதுமக்கள் திறந்தவெளியில் தீ மூட்டுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்வதாக மாமன்னர் அறிவுறுத்தினார்.
உஷ்ணம் தொடர்பான எவ்வித உடல் உபாதைகளையும் எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையில், மூத்த குடியினரும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், வெப்பம் நிறைந்த பகுதிகளில் இருக்க வேண்டாம் என்றும் நினைவூட்டப்படுகிறார்கள்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]