கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி கடந்த வெள்ளிக்கிழமை வரை, மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் லெஜாங் சிறப்பு நடவடிக்கையின் மூலம், ஒரு பெண் உட்பட 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில் இருந்த நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.
33 முதல் 50 வயதுக்குட்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்.ஏ.சி.முஹமட் லாசிம் இஸ்மாயில் கூறினார்.
மேலும், 2024-ஆம் ஆண்டு முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த, இரண்டு லட்சத்து 84 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய மொத்தம் 24 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
''இந்நடவடிக்கையின் போது பிரகாஷ் குழு, ஐகான் குழு, கோபிஸ் குழு மற்றும் போத்தாக் குவாங் குழு ஆகிய நான்கு தீவிரமாக இயங்கி வந்த வாகனத் திருட்டுக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர். மேலும், காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட பல்வேறு வகையிலான 24 வாகனங்களும் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 5 வாகனங்கள் அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எஞ்சியவை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக பல மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,'' என்றார் அவர்.
இன்று காலையில் வாங்சா மாஜுவின் போலீசாரின் ஒன்றுகூடலைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)