Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சவால்களைக் கடந்து சாதிக்கும் சாமானியப் பெண்

11/03/2026 08:03 PM

கோலாலம்பூர், 11 மார்ச் (பெர்னாமா) --  இன்றைய காலக்கட்டத்தில், சமூகத்தில் எல்லைகளைக் கடந்து தங்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் பல துறைகளில் பெண்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.  

ஒரு காலக்கட்டத்தில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தொழில்துறைகளில், தற்போது பெண்கள் தைரியமாக கால் பதித்து, தங்களுக்கென புதிய பாதைகளை உருவாக்கி வருகின்றனர். 

அந்த வகையில், திறமையும் துணிச்சலும் இருந்தால் பெண் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றார் கனரக லாரி ஓட்டுநர் காமணி முருகன்.

கனரக லாரி ஓட்டுநராக பணியாற்றுவது தமக்கு வெறும் வேலை மட்டுமல்ல, மாறாக தன்னம்பிக்கையை வழங்கும் ஒரு வாழ்க்கைப் பாதை என்று காமணி முருகன் கூறினார். 

தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவதற்கும், தனக்குள் இருக்கும் திறமைகளை சமூகத்திற்கு நிரூபிக்கவும் தாம் தேர்வுச் செய்த இத்தொழில் பெரும் துணையாக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

''சிறு வயது முதலே நான் தந்தையுடன் லாரியில் செல்வேன். அன்று முதல் எனக்கு இத்துறையில் ஆர்வம் பிறந்தது. என் அப்பா என்னை படிக்க வைத்தார். ஆனால், என்னுடைய ஆசை இதில்தான் இருந்தது. 21 வயதில் நான் லாரிக்கான ஓட்டுநர் உரிமம் எடுத்தேன். பல லாரிகளை ஓட்டியுள்ளேன்'', என்றார் அவர்.

பெற்றோரிடம் இருந்து கிடைத்த முழு ஆதரவு தமக்கு மிகப்பெரிய பலமாக இருந்த போதிலும், உறவினர்கள் மத்தியில் பல்வேறு எதிர்மறையான கருத்துகளையும் விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்ததாக, அவர் கூறினார்.

தொடக்கத்தில், அவர்களின் கருத்துகள் மன அழுத்தத்தையும் சவாலையும் ஏற்படுத்தினாலும், பெற்றோரின் உறுதியான ஆதரவும் தன்னம்பிக்கையும் தன்னை முன்னேற்ற பாதையும் இட்டுச் சென்றதாக காமணி விவரித்தார். 

''உன்னால் முடியாது என்று பலர் கூறும்போது எனக்கு முதலில் கோபம் வரும். பின்னர், ஏன் என்னால் முடியாது என்ற வெறியுடன் நான் அதனை நிரூபிக்க விரும்புவேன்'', என்று காமணி கூறினார்.

இதனிடையே, சமூகத்தில் இருந்து வரும் எதிர்மறையான கருத்துகளாலும் பயத்தினாலும் கனவுகளைக் கைவிடாமல், திறமையின் மீது நம்பிக்கை வைத்து பெண்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.

மேலும், குடும்பத்திலிருந்து கிடைக்கும் ஆதரவைப் பெண்கள் நன்முறையில் பயன்படுத்தி கொள்வதோடு, கல்வி மற்றும் அனுபவத்தின் மூலம் தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அண்மையில், பெர்னாமா செய்திகளின் தயாரிப்பிலான பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)