கோலாலம்பூர், 08 மார்ச் (பெர்னாமா) -- ஒவ்வொரு குடும்பத்தின் நாடி துடிப்பாகவும், சமூகத்தின் தூணாகவும் தேசிய முன்னேற்றத்தின் முக்கிய உந்துதலாகவும் பெண்கள் செயல்படுகின்றனர்.
வலுவான குடும்பம் மற்றும் வளமான சமூகத்திற்குப் பின்னால், சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் தியாகம், சகிப்புத்தன்மை மற்றும் அறிவாற்றல் இடம்பெற்றுள்ளதாக, இன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமது முகநூல் பதிவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
தமது வாழ்க்கைப் பயணத்தில் பெண்களின் தியாகங்களை, குறிப்பாக தமது மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் தமது போராட்டம் முழுவதும் வலிமையாகவும் ஆதரவாகவும் இருந்த தமது பிள்ளைகளின் தியாகங்களைத் தனிப்பட்ட முறையில் மிகவும் பாராட்டுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தாய்மார்கள், மனைவிகள், பிள்ளைகள், கல்வியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என பல்வேறு பங்களிப்பை வழங்கும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்தும் அதே வலிமை வெளிப்படுவதாக அவர் புகழாரம் சூட்டினார்.
மேலும், தங்கள் குடும்ப நல்வாழ்விற்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் தொடர்ந்து அமைதியாகப் போராடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பெண்களின் பங்களிப்பை தொடர்ந்து பாராட்டி, அவர்கள் மதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதையும், தேசிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் பொருட்டு நியாயமான வாய்ப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அன்வார் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)