Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

அபிநயத்தில் ஒளிர்ந்த 'லாஸ்யா தாண்டவ' பரதம்

15/03/2026 04:52 PM

பிரிக்பீல்ட்ஸ், 15 மார்ச் (பெர்னாமா) -- கலை, நளினம், பாவத்துடன் சேர்த்து ஒழுக்கத்தையும் நன்னெறிப் பண்புகளையும் கற்றுக் கொடுப்பதே பரதநாட்டியத்தின் தனிச் சிறப்பாகும்.

அத்தகைய கலை மீது வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் பலரும் அதீத ஆர்வம் கொண்டிருந்தாலும் நிதிவளம், போதுமான இடவசதி போன்ற சூழ்நிலையால் பல நாட்டியப் பள்ளிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன.

அதேநிலையை எதிர்கொண்டிருந்த, மலேசிய ஶ்ரீ நந்திகேஷ்வர் நடன மற்றும் இசை அகாடமியின் வளர்ச்சிக்காக, MYSKILLS அறவாரியம் இணைந்து நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்த  'லாஸ்ய தாண்டவ' பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு பலரும் நிறைவான ஆதரவை அளித்திருந்தனர்.

66 வயதுடைய குரு ஶ்ரீ டாக்டர் சந்திரமோகன் இராமசாமி என்பவரே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்த நடனப்பள்ளியை வழிநடத்தி வருகிறார்.

தொடக்கத்தில் வெறும் பத்து ரிங்கிட் கட்டணத்தில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு இக்கலையைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியதன் வழி இன்று நாடு முழுவதும் இவரின் மாணவர்கள் வியாபித்திருக்கின்றனர்.

இக்கலையானது, புறநகர் மற்றும் பின்தங்கிய பகுதிகளிலும் வளர்வதற்கு பல நன்கொடையாளர்களையும் ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து இந்த நிதி திரட்டு நிகழ்ச்சியை மைஸ்கில்ஸ் அறவாரியம் ஏற்று நடத்தியதாக அதன் இயக்குநர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் தெரிவித்தார்.

"நாட்டியம் என்பது பணக்கார மாணவர்களுக்குத்தான் என்று இருக்கக்கூடாது. மாறாக ஏழை மாணவர்களும் அதைக் கற்று சிறப்புற வேண்டும். அந்த வகையில் இந்த நடனப்பள்ளியில் பத்து ரிங்கிட் வசூல் செய்து மாணவர்களுக்கு நாட்டியக் கலை கற்றுக் கொடுக்கப்பட்டு வருவது வரவேற்புக்குரியது. இத்தகைய பொதுநல குணமுடைய பள்ளிக்கு பொருளாதார அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்ற தார்மீக சிந்தனையில் மைஸ்கில்ஸ் இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்தியது," என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நல்லுள்ளங்கள் வழங்கிய நிதி ஆதரவின் மூலம் கணிசமான தொகை திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் அந்நிதி அதன் கலாலயரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.

கலை வளர்ச்சிக்காக கைகொடுத்திருக்கும் மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு நன்றி பாராட்டிய டாக்டர் சந்திரமோகன், பரதம் மீது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

"தற்போது நான் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் கனகாம்பரத்தில் இப்பள்ளியை வைத்து நடத்துகின்றேன். பரதநாட்டியம் கற்றுக் கொள்ள விரும்புவர்கள் தாராளமாக எங்களை அணுகலாம். எங்களைத் தொடர்பு கொண்டால் எங்களின் குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு பரதத்துடன் கட்டொழுங்கு, கலாச்சாரம், பண்பு, ஒழுக்கம், சுயமாரியாதை ஆகியவற்றையும் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றனர்," என்றார் அவர்.

லாஸ்ய தாண்டவத்தில் தொடங்கி  ஜதிஸ்வரம், தோடயமங்கலம், நவரச நிலய, கதம்ப நர்த்தனம், சாமுண்டீஸ்வரி என்று வளர்ந்து இறுதியாக தில்லானாவில் இந்த நாட்டிய நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

நந்திகேஷ்வர் நடனப்பள்ளியுடன் இணைந்து விஹாரா ஆர்ட்ஸ் நடனப்பள்ளி ஆசிரியர்கள்  மொத்தம் 19 பேர் நாட்டியமாடினர்.

டாக்டர் சந்திரமோகனின் நட்டுவாங்கத்துடன் சேர்த்து சுமார் ஒன்பது கலைஞர்கள் இசைவாத்தியத்துடன் கீர்த்தனையும் ஜதியும் பாடினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)