கோலாலம்பூர், மார்ச் 05 (பெர்னாமா) -- ஈரான் தொடர்பான மோதல்கள், காசா மற்றும் பாலஸ்தீனத்தில் நீடிக்கும் மக்களின் துயரங்களை, மலேசியர்கள் பாடமாக கொண்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் வலிமை இராணுவம் அல்லது பொருளாதார பலத்தை மட்டும் சார்ந்தது அல்ல.
மாறாக, மக்களின் ஒற்றுமை மற்றும் நன்னெறிப் பண்புகள் பின்பற்றுவதும் அடங்கும் என்று, பிரதமர் எடுத்துரைத்தார்.
''நம்மிடம் திறமை இருக்கிறது. ஃபெல்டாவை பாதுகாக்கும் திறன் இன்னும் உள்ளது. மருத்துவமனைகளை கவனித்து கொள்கிறோம். பள்ளிகளைக் கவனித்து கொள்கிறோம். நம்மிடம் இன்னும் திறமை இருக்கிறது. அந்த நாட்டில் நடப்பது போன்று ஒவ்வொரு நாளும் அழிப்பதற்கு யாரும் வருவதில்லை. ஆகவே இச்சூழலைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் வலியுறுத்த விரும்புவது அவ்வளவுதான்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஃபெல்டா குழும பணியாளர்கள் உடனான சந்திப்பில் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
நிச்சயமற்ற உலக சூழ்நிலையில், நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, நாட்டை பலவீனப்படுத்தும் முரண்பாடுகளில் மலேசியா சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நினைவூட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)