Ad Banner
 பொது

வாகன உரிமையைக் கட்டுப்படுத்தும் புதிய கொள்கை; அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை - லோக்

14/02/2026 05:05 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 14 (பெர்னாமா) -- கிள்ளான் பள்ளத்தாக்கில், வழக்கத்திற்கு மாறாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போதிலும் வாகன உரிமையை கட்டுப்படுத்தும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

பொதுமக்களின் உணர்வுகளையும், பொருளாதாரத் துறையையும் கருத்தில் கொண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இதுவரையில் குறிப்பிட்ட எந்தவொரு கொள்கையையும் அமல்படுத்தவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

கடந்த ஆண்டு மலேசியாவில் 820,000 வாகனங்கள் விற்பனையாகி, தென்கிழக்கு ஆசிய சந்தையில் இந்தோனேசியாவை முந்தியது.

இந்நிலையில், வாகன உரிமை அதிகரிப்பு காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டதாக அந்தோணி லோக் கூறினார்.

"எனவே, ஒரு கொள்கை இருக்கிறது என்றால் வேறு பிரச்சனைகள் இருக்கும், வேறு புகார்களும் இருக்கும். இப்போதைக்கு வாகனக் கட்டுப்பாடு தொடர்பாக எங்களிடம் எந்தக் கொள்கைகளும் இல்லை. ஆனால், நீண்ட கால அடிப்படையில், நாம் இதைப் பார்க்க வேண்டும்.
நமது வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது," என்றார் அவர்.

எனவே, பொது போக்குவரத்தை விரிவுப்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

இதில், மின்சார ரயில் சேவை, ஈ.டி.எஸ்-ஐ அதிகரிப்பதும் பரபரப்பான பாதைகளில் பயணப் பெட்டிகளை விரிவுப்படுத்துவதும் அடங்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)