கெந்திங் மலை, பிப்ரவரி 13 (பெர்னாமா) -- அமலாக்க நிறுவனங்களை உட்படுத்திய ஊழல் நடவடிக்கைகளில் முகவர் அல்லது இடைத்தரகர்களை சதியாளராக பயன்படுத்தும் கும்பல்களை எஸ்.பி.ஆர்.எம் அடையாளம் கண்டுள்ளதோடு, அவர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளதாக டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசாய்ரி யாஹ்யா தெரிவித்தார்.
அண்மைய சில ஆண்டுகளாக அமலாக்கப் பணியாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் ஊழல் நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருவதால் எஸ்.பி.ஆர்.எம்-இன் கவனம் அக்குழுவினர் மீது உள்ளதாக அவர் கூறினார்.
''இவ்வாண்டு எங்கள் கவனம் முகவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்புடைய எந்த தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகும். அந்நடவடிக்கைகளை நிறுத்துமாறு நான் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். மேலும், இந்த முகவர்களால் சதி திட்டம் தீட்டப்பட்ட சில கும்பல்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்,'' என்றார் அவர்.
அரசாங்க விவகாரங்களில் ஊழல் நடவடிக்கைகள் ஏற்படுவதற்கு இடைத்தரகர்களின் செல்வாக்கு முக்கிய காரணமாகும்.
மேலும், அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களை விட அதிக லாபம் ஈட்டுவதாகவும் அஹ்மாட் குசாய்ரி சுட்டிக் காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)