பட்டர்வொர்த், 13 பிப்ரவரி (பெர்னாமா) -- இம்மாத தொடக்கத்தில் தனது காதலி என்று நம்பப்படும் ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், வெள்ளிக்கிழமை பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அயினி அடிலா முஹமட் ஃபைசால் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதைப் புரிந்ததாக எல். ரவீந்தர் தலையசைத்தார்.
இருப்பினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
பிப்ரவரி 4ஆம் தேதி காலை மணி 9.30 முதல் 9.41-க்குள் தாமான் ஶ்ரீ முர்னியில் உள்ள வீடொன்றில், 41 வயது பெண்ணை கொலை செய்ததாக ரவீந்தர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை, பிரம்படி ஆகியவை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படாத நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மார்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)