Ad Banner
Ad Banner
 பொது

80 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் கைது செய்தது

31/01/2026 05:35 PM

சிலாங்கூர், 31 ஜனவரி (பெர்னாமா) -- சபா பெர்னாம், பாகான் நகோடா ஒமார் கடற்பகுதியில் இன்று அதிகாலை 80 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற 'POM POM' வகை படகு ஒன்றை, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.

உளவு மற்றும் ஒ.பி ஏசான், ஒ.பி தஞ்ஜோங் நடவடிக்கைகள் வழி, அந்தப் படகு அதிகாலை 3.30 மணியளவில் பிடிபட்டதாக, சிலாங்கூர் கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் துணை இயக்குநர் தளபதி முஹமட் ஃபாய்ருஸ்னிசாம் அப்துல் ரசாக் தெரிவித்தார்

''கடல்சார் பாட்ரோல் படகு அடையாளம் காணப்பட்ட இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அதிகாலை 3.30 மணியளவில் சுங்காய் அயேர் தாவார், பாகான் நகோடா ஒமார் தென்மேற்கு பகுதியில் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் ஒரு படகை கைப்பற்றினோம். நீல நிற உடற்பகுதியும், சிவப்பு மற்றும் கருப்பு நிற மேற்பகுதியையும் கொண்ட, பதிவு எண் இல்லாத ஒரு 'போம் போம்' வகை படகை நாங்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றினோம்'' என கடற்படை தளபதி முஹமட் ஃபாய்ருஸ்னிசாம் அப்துல் ரசாக் கூறினார்.

இன்று, சிலாங்கூர் கடல்சார் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முஹமட் ஃபாய்ருஸ்னிசாம் அவ்வாறு கூறினார்.

அந்தப் படகில் 80 இந்தோனேசிய சட்டவிரோத குடியேறிகள் இருந்தது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியும், அவர்கள் சென்றடையும் இடத்தைப் பொறுத்து தலா 1,500 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை கட்டணமாகச் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)