ஜார்ஜ்டவுன், ஜனவரி 27 (பெர்னாமா) -- இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் அத்தியாவசிய பொருளாகக் கருதப்படும் தேங்காயை மக்களிடமும் ஆலயங்களிலும் கொண்டு சேர்க்கும் விற்பனை நடவடிக்கைகளில் வியாபாரிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேங்காய் விற்பனையில் சில குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஈடுப்பட்டு வரும் வேளையில் பினாங்கு ஜாலான் டத்தோ கெராமாட்டில் வசிக்கும் தேங்காய் விற்பனையாளரான எம். ஜோயல் ஜெயச்சந்திரன், 18 வயதில் இருந்தே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
இது வெறும் வணிகமல்ல, மாறாகத் தமது தந்தை வழியில் தொடரும் இத்தொழில் முப்பதாண்டு கால குடும்பப் பாரம்பரியமாக மாறியுள்ளதாக கூறினார்.
தைப்பூசக் காலத்தில் நிலவும் அதீதத் தேவையைப் பூர்த்தி செய்ய தாங்கள் மேற்கொள்ளும் முன்னேற்பாடுகள் குறித்து அவர் இவ்வாறு விவரித்தார்.
''ஒரு மாதத்திற்கு முன்பே தேங்காய்களைப் பறித்து, உரித்து, பேக்கிங் செய்துவிட்டோம். அவை பகான் டத்தோ எஸ்டேட்டில் இருந்து பினாங்கு நகரத்திற்கு ஒரு வாரத்திற்குள் கொண்டு வரப்படும்'', என்றார் எம். ஜோயல் ஜெயச்சந்திரன்.
வழக்கமான நாட்களைவிட தைப்பூசக் கொண்டாட்டத்தின்போது தேங்காய்களுக்கான தேவை இன்னும் அதிகரிப்பதாகவும் முன்பதிவுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் 50,000 முதல் 80,000 வரை தேங்காய்கள் விற்கப்படுவதாகவும் ஜோயல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டைவிட, இவ்வாண்டுக்கான தேங்காய் விற்பனை சீராக உள்ள போதிலும், சாதாரண நாட்களைப் போலவே தைப்பூசத்திலும், ஒரு தேங்காயின் விலை 2 ரிங்கிட் 50 சென்னாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
''வாங்குபவர்கள் தங்களுக்கு வேண்டிய தேங்காய்களின் அளவை முன்கூட்டியே எங்களிடம் தெரிவித்து விடுவார்கள். ஏனென்றால் சில தேங்காய்கள் மிக பெரியதாக இருக்கும் என்பதால், அவற்றை விரும்புவோருக்குத் தகுந்தாற்போலவும், மற்றவர்களுக்குத் தேவைப்படும் அளவிலும் நாங்கள் வகைப்படுத்தி வழங்குகிறோம்'', என்றார் எம். ஜோயல் ஜெயச்சந்திரன்.
திட்டமிட்டபடி தைப்பூச நாள்களில் குறிப்பிட்ட இடங்களுக்குத் தேங்காய்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தங்கள் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேங்காய் உரித்தல் மற்றும் பதப்படுத்துதல் போன்ற கடினமான பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளதை ஒப்புக்கொண்ட ஜோயல் ஜெயச்சந்திரன், இத்தொழியில் வருங்கால தலைமுறையினர் ஈடுபட்டு தங்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கி கொள்ளவும் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)