கோலா திரெங்கானு, 26 ஜனவரி (பெர்னாமா) -- சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருமானம் பெற்றதாக, முன்னாள் தரைப்படைத் தளபதி தான் ஶ்ரீ முஹமட் ஹஃபிசுடேயின் ஜந்தான்-இன் மனைவியான சல்வானி அனுவார் கமாருட்டின் மீது இன்று கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும், நீதிபதி முஹமட் அஸார் ஒத்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, சக்கர நாற்காலியில் வந்த 27 வயதான சல்வானி மறுத்து விசாரணைக் கோரினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் 5,000 ரிங்கிட் சல்வானி-க்கு சொந்தமான வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி 16-ஆம் தேதி, பெசுட் அருகே கெர்தே-வில் உள்ள வங்கிக் கிளை ஒன்றில் அக்குற்றம் புரியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு கள்ளப்பண பரிமாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம், துணைச் சட்டம் 4(1)(b)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட தொகையின் ஐந்து மடங்கிற்கும் குறையாத அபராதம் அல்லது ஐந்து லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகைச் செய்யும் அதேச் சட்டம், துணைச் சட்டம் 4(1)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
இதனிடையே, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் 77,000 ரிங்கிட் நிதியைப் பெற்றதாக சல்வானி மீது கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)