ஜெலி, ஜனவரி 24 (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி 16 முதல் நேற்று வரை மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் துங்காக் சோதனையில், அண்டை நாடுகளைச் சேர்ந்த வேன்கள் சம்பந்தப்பட்ட 42 வெளிநாட்டு வாகனங்கள் மீது கிளந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில் பெரும்பாலானவை, பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படாத தனிநபர்கள் அல்லது தனிப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான வேன்களைப் பயன்படுத்தப்படுத்தி, அனைத்துலக விநியோக அனுமதியான I-C-P-ஐ தவறாகப் பயன்படுத்தியது தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS-சில் பதிவு செய்யும் போது, பயணிகளை தங்களுடன் அழைத்துச் செல்லாமல், அங்கேயே இறக்கிவிட்டு, பின்னர் அவ்வளாகத்தைக் கடந்ததும் அவர்களை மீண்டும் ஏற்றிச் செல்வதே, வேன் உரிமையாளர்களின் தந்திரம் என்று கிளந்தான் மாநில JPJ இயக்குநர் முஹமட் மிசுவாரி அப்துல்லா தெரிவித்தார்.
"சாலையைப் பயன்படுத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உரிமங்கள், அனுமதிகள், காப்பீடு மற்றும் பாதுகாப்பு விவரக்குறிப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தும் என்பதோடு பிற சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிருக்கும் பாதகத்தை ஏற்படுத்தும்." என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் பூங்கா, ஜே.பி.ஜே அமலாக்க நிலையத்தில் நடத்தப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் 67 வெளிநாட்டு வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)