Ad Banner
 பொது

பொது இடத்தில் திடக்கழிவுகளை வீசிய இந்தோனேசிய பெண்ணுக்கு அபராதம்

23/01/2026 04:20 PM

ஜோகூர் பாரு, 23 ஜனவரி (பெர்னாமா) --  பொது இடத்தில் திடக்கழிவுகளை, அதாவது சிகரெட் துண்டு மற்றும் நீர் பாட்டிலை வீசியதை ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சமூக சேவை செய்யவும் இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு, 2007-ஆம் ஆண்டு திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது துப்புரவுச் சட்டம், செக்‌ஷன் 77A-வின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்காகும்.

நீதிபதி நோர் அசியாதி ஜாஃபார் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 49 வயதான அனிதா லுக்மான் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஜனவரி முதலாம் தேதி நள்ளிரவு மணி 12.41-க்கு ஸ்துலாங் லாவூட், ஜாலான் இப்ராஹிம் சுல்தானில் திடக்கழிவுகளை அல்லது சிகரெட் துண்டையும் நீர் பாட்டில்களையும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள் வீசாமல், பொது இடத்தில் வீசியதாக அனிதா லுக்மான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவருக்கு, நீதிமன்றம் 500 ரிங்கிட் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் 15 நாள்கள் சிறைத் தண்டனையும் விதிக்க தீர்ப்பளித்தது.

மேலும், ஆறு மாத காலத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் என்ற அடிப்படையில் ஆறு மணி நேரம் சமூக சேவையை மேற்கொள்ளவும், அதைப் பின்பற்றத் தவறினால் 2,000-லிருந்து 10,000 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது துப்புறவு அமைப்பு, SWCorp தலைமை செயல்முறை அதிகாரி காலிட் முஹமட், புல் வெட்டுதல், கால்வாய் மற்றும் கழிவறையைச் சுத்தம் செய்தல், துப்புறவு நடவடிக்கை ஆகியவை அவர்களுக்கு விதிக்கப்படும் சமூக சேவை தண்டனைகளில் அடங்கும் என்று குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)