Ad Banner
 சிறப்புச் செய்தி

6 வயதில் முதலாம் ஆண்டு; பெற்றோர்களின் வரவேற்பும் எதிர்பார்ப்பும்

22/01/2026 07:42 PM

பிரிக்பீல்ட்ஸ், ஜனவரி 22 (பெர்னாமா) -- 2027 முதல் ஆறு வயது பிள்ளைகள் முதலாம் ஆண்டில் கல்வியைத் தொடங்கலாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட புதிய அறிவிப்பு கல்வித் துறையில் ஒரு முன்னோடி மாற்றமாகக் கருதப்படுகிறது. 

நாட்டின் ஆரம்ப கல்வி முறையில் சேரும் மாணவர்களின் புதிய வயது மாற்றங்கள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துமா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் அந்த அறிவிப்பை வெகுவாக வரவேற்றிருப்பது பெர்னமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது.  

மேலும், இம்மாற்றம் மாணவர்களிடையே எத்தகைய நன்மைகளைத் தரக்கூடும் என்பது குறித்தும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

6 வயதில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நடைமுறை, இந்தியா, கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த வேளையில் அனைத்துலக கல்வித் தரத்திற்கு இணையாகப் பிள்ளைகள் 6 வயதில் முதலாம் ஆண்டில் சேர்ப்பது மலேசியாவின் முற்போக்கான சிந்தனையைக் காட்டுகிறது.

இப்புதிய திட்டம் கல்வி கற்கும் கால அளவை ஓராண்டு முன் நகர்த்துவதுடன் மாணவர்கள் விரைவாக உயர்க்கல்வியை முடித்து வேலைக்குச் செல்ல முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்கூட்டிய பதிவு என்பது பெற்றோரின் தனிப்பட்ட விருப்பத் தேர்வானாலும்
இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் சிலர் கூறினர்.

''இன்றைய காலக் குழந்தைகள் மிகுந்த அறிவுத்திறன் கொண்டவர்களாக விளங்குவதால் அவர்களை ஆறு வயதிலேயே முதலாம் ஆண்டில் சேர்ப்பது ஒரு சுமையாக இருக்காது. மாறாக, இது அவர்கள் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்'' என்றார் ஃப்லொரென்ஸ் சிங்ஹெ.     

''பிள்ளைகளுக்கு நாம் எதனைக் கற்றுக்கொடுக்கிறோமோ அதனை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் சிறு வயதிலேயே அவர்களைப் பள்ளியில் சேர்த்து கல்வியறிவோடு ஊட்டி வளர்த்தால் அது அவர்களுக்கு ஒருபோதும் சுமையாக அமையாது.'' என்றார் குணசீலன் இராமையா.
 
அதேவேளையில், குறும்புத்தனமும் மழலை பருவமும் மாறாத பிள்ளைகளை 6 வயதிலேயே முதலாம் ஆண்டில் சேர்க்கத் துணியும் பெற்றோர்களின் சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் காலத்திற்கேற்பத் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் மனப்பாங்கையும் காட்டுகின்றது.     

''ஆறு வயதிற்குட்பட்ட பிள்ளைகளே தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களாகவே செய்துகொள்ளும் அளவிற்குத் திறமை பெற்றுள்ள நிலையில் அவர்களை ஆறு வயதில் முதலாம் வகுப்பில் சேர்ப்பது என்பது அவர்கள் தங்களைத் தாங்களே சுயமாகச் சமாளித்துக்கொள்ள முடியும்'', என்றார் தமிழ்ச்செல்வி செல்வநாதன்.

''ஆறு வயதிலேயே பிள்ளைகளைத் தாராளமாகப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பலாம். ஏனெனில், இச்சிறு வயதில் அவர்கள் கைப்பேசி விளையாட்டுகளில் காட்டும் அதீத ஆர்வத்தையும் கவனிப்புத் திறனையும் பள்ளிக்குச் சென்று படிப்பிலும் செலுத்தத் தொடங்கினால் அது அவர்களின் கற்றல் வளர்ச்சிக்குப் பெரும் பயனாக அமையும்'' என்றார் லிங்கேஸ்வரன் பாலன்.  

அதோடு மட்டுமல்லாமல், ஏட்டுக்கல்வியைத் தாண்டி பிள்ளைகளை அன்போடும் விளையாட்டு முறையிலும் ஆசிரியர்கள் வழிநடத்தினால் இந்த மாற்றத்தைப் பிள்ளைகளும் மிக எளிதாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பையும் பெற்றோர்கள் முன்வைத்தனர்.

இப்புதிய கல்வி முறை மாணவர்களின் அறிவுத்திறனை மெருகேற்றுவதுடன் சிறு வயதிலேயே சவால்களை ஏற்றுக்கொண்டு அதனை முறியடிக்கும் திறனை அவர்களுக்கும் உருவெடுக்க வழி செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)